×

சப்த மாதர் திருமேனிகள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

1) பிராமி – நான்கு முகம் கொண்டவள். மேற்கரங்களில் கெண்டி ஜெப மாலை ஏந்தி முன்கரங்களில் அபய, வரத முத்திரைகளைத் தரித்தவள். பொன்னிறமானவள். பத்மாசனத்தில் வீற்றிருப்பவள். அன்ன வாகனத்தில் பவனி வருபவள். தூய வெண்ணிற ஆடைகளை அணிந்தவள். சில நூல்களில் சுருக், சுருவம் ஆகிய ஹோம கரண்டிகளை ஏந்தியவளாகவும் காட்சி தருகிறாள்.

2) மகேஸ்வரி – ஜடாமகுடம் தரித்து அதில் கொன்றை மாலையும் இளம்பிறையும் சூடியவள். பெரும்பாலும் மேற்கரங்களில் மான், மழு ஏந்தியவளாகக் காட்டப்பட்டுள்ளாள். சில இடங்களில் தட்சிணாமூர்த்தியைப் போல பாம்பு, தீ, அகல் ஏந்தியவளாகவும் காட்டப்பட்டுள்ளாள். புலித் தோலாடை புனைந்தவள். இடப் வாகனத்தை உடையவள். முன்கரங்களில் அபய – வரத
முத்திரைகளைத் தரித்தவள்.

3) கௌமாரி – மேற்கரங்களில் வஜ்ஜிரம், சக்தி ஆகியவற்றை ஏந்தியவள். (சில நூல்கள் ஜெபமாலை, சக்தியுடன் காட்சி தருகிறாள்) சிவப்பு வண்ண ஆடை அணிந்தவள். சில சமயம் வேல், வில்லுடனும் காட்சி தருபவள். மயில் வாகனத்தில் பவனி வருபவள். முன்கரங்களில் அபய, வரத முத்திரைகளைத் தரித்தவள்.

4) வைஷ்ணவி – மேற்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியவள். நீலமேனி கொண்ட இவள், மஞ்சள் வண்ண (பீதாம்பர) ஆடைகளை அணிந்து துளசி மாலையைச் சூடியுள்ளாள். கருட வாகனத்தை உடையவள். சில சிற்பங்களில் பஞ்சாயுதங்களை ஏந்தியவளாக அமைத்துள்ளனர்.

5) வாராகி – பத்மராக வண்ணத்தினாள் பச்சைப் பட்டாடை அணிந்தவள். மேற்கரங்களில் ஏர், உலக்கை ஆகியவற்றை ஏந்தியவள். சில கோயில்களில் சங்கு சக்கரம் ஏந்தியவளாகவும், வாள் கேடயம் ஏந்திய வளாகவும் அமைத்துள்ளனர். செங்காந்தள் மலர்களைச் சூடுபவள். எருமை அல்லது சிங்கவாகனத்தில் பவனி வருபவள்.

6) இந்திராணி – இந்திர நீல வண்ண மேனியனான இவள் பூம்பட்டாடைகளை உடுத்தி ஐராவதத்தின் மீது பவனி வருகிறாள். மேற் கரங்களில் வஜ்ரம் – அங்குசம் அல்லது இரண்டு கரங்களிலும் இரண்டு வஜ்ஜிரங்களைத் தாங்குகிறாள். முன்கரங் களில் அபய வரத முத்திரை தரித்துள்ளாள். இவள் இரண்டு கால்களையும் தொங்கவிட்டு ராஜகோலாகலத்தில் வீற்றிருக்கின்றாள்.

7) சாமுண்டி – தலைமுடியை விரிந்த ஜடாமண்டலமாக முடிந்தவள். அதில் பாபி மண்டையோடு சந்திரனைச் சூடியவள். விழித்த அகன்ற கண் வாளையும் வாயிதழ் ஓரங்களில் வளைந்த கோரைப் பற்களையும் கொண்டவள். காதில் பிணத்தோட்டையும், மார்பில் மண்டையோட்டு மாலைகளையும் அணிந்தவள். பிரேதத்தை வாகனமாக உடையவள் என்று நூல்கள் குறித்தாலும் சிங்கத்தையும் வேதாளத்தையும் இவளுக்கு அமைத்துள்ளனர்.

தொகுப்பு : அருள்ஜோதி

The post சப்த மாதர் திருமேனிகள் appeared first on Dinakaran.

Tags : Sabatha Madar Thumenians ,Saffron Spirituality ,Brahmi ,Sabtha Madar Thumenii ,Dinakaraan ,
× RELATED பிராமி எழுத்துக்கள், பீரங்கி பார்வை...